சமாரியா பெண்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்து, கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமாரியா மாகாணம் வழியாகப் போகிறார்கள். ரொம்பத் தூரம் நடந்ததால் எல்லாரும் களைப்பாக இருக்கிறார்கள். உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில், சீகார் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்கிறார்கள். அங்கே இருக்கிற ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கிணற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யாக்கோபு வெட்டியிருக்கலாம், அல்லது கூலி கொடுத்து வெட்ட வைத்திருக்கலாம். இன்றும்கூட, நாப்லஸ் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இந்தக் கிணற்றைப் பார்க்க முடியும்.
இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் இயேசு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்காகப் பக்கத்திலிருக்கிற நகரத்துக்குப் போகிறார்கள். அப்போது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கே வருகிறாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்கிறார்.
யூதர்களும் சமாரியர்களும் பரம விரோதிகள். அதனால், ஒருவருக்கொருவர் பேசக்கூட மாட்டார்கள். இயேசு தண்ணீர் கேட்டதும், அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம்! அதனால், “நான் ஒரு சமாரியப் பெண், நீங்களோ ஒரு யூதர். அப்படியிருக்கும்போது, குடிப்பதற்கு என்னிடம் எப்படித் தண்ணீர் கேட்கிறீர்கள்?” என்று கேட்கிறாள். அதற்கு இயேசு, “கடவுள் கொடுக்கும் இலவச அன்பளிப்பு எது என்றும், குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்றும் உனக்குத் தெரிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று சொல்கிறார். அப்போது அவள், “ஐயா, தண்ணீர் எடுக்க உங்களிடம் வாளிகூட இல்லை, கிணறும் ஆழமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, வாழ்வு தரும் தண்ணீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்த எங்கள் மூதாதையான யாக்கோபைவிட நீங்கள் உயர்ந்தவரா? அவரும் அவருடைய பிள்ளைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தார்கள், அவருடைய கால்நடைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தன” என்று சொல்கிறாள்.